Followers

ஐந்திணை ஒழுக்கம்

on Sunday, May 8, 2011

ஐந்நிலப் பிரிவும் ஆற்றோட்டமும்:

ஐந்நிலப் பிரிவைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் ஒரு ‌பேராற்றை அதன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்ந்து செல்ல வேண்டும். ஆறுகள் மலைகளில் தொடங்குகின்றன. முதலில் அவை நெருக்கமான அறுத்தோடிகள் எனப்படும் சிற்றோடைகளின் மூலம் மழைநீரை அல்லது பனிக்கட்டி உருகிய நீரை மலையின் குத்துச் சரிவான பரப்பில் பெறுகின்றன. இத்தகைய சிற்றோடைகள் பல சேர்ந்து சிற்றாறுகளாக மலையடிவாரத்தை அடைகின்றன.  இந்நிலப் பகுதியே குறிஞ்சி நிலமாகும். இங்கு மழைக்காலம் நின்ற பிறகும் மழையின் போது மலையினு‌ள் இறங்கியிருக்கும் மழைநீரின் கசிவால் சிற்றோடைகளில் நீரோட்டம் இருக்கும். எனவே மலைப்பகுதி நீர்வளத்தில் சிறந்திருக்கும்.மலைய‌டிவாரத்தில் நல்ல சரி‌வுடனிருக்கும் நிலத்தில் மலையைக் கடந்து வரும் சிற்றாறுகள் பாறைகளாகிய தடைகளால் தடுக்கப்ப‌ட்டு ஏறக்குறைய மேல் மட்டத்திலேயே ஒன்றுக்கொன்று பெரும் இடைவெளியின்றி ஓடும். இப்பரப்பில் பெருமரங்களும் செழிப்பான புல்வெளிகளும் தழைக்கும் அளவுக்கு நீர்வளம் இருக்கும். இது முல்லை நிலம்.

முல்லை நிலம் முடியும் இடத்தில் இச்சிற்றாறுகள் பல இணைந்து பேராறுகள் உருவாகும். இப்பேராறுகள் ஒன்றுக்கொன்று பெருந்தொலைவில் இருக்கும். அத்துடன் அவை நில மட்டத்துக்குக் கீழே ஓரளவு ஆழத்தில் ஓடும். இந்தப் ‌பேராறுகளுக்கிடைப்பட்ட நிலத்துக்கு ஆற்றில் ஓடும் நீர் கிடைப்பதில்லை. மலையிலிருந்து தொலைவாகிவிடுவதால் மழையும் குறைவாகவே இருக்கும். இங்கே பாலை நிலம் உருவாகிறது.ஆற்று நீர் விரைந்து ஓட முடியாமல் நிலம் தட்டையாக மாறுமிடத்தில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றுகிறது. இங்கு ஆற்று மட்டம் உயர்ந்‌து விடுகிறது. பெருவெள்ளங்களின் போது ஆறு கரைபுரண்டு கிளையாறுகளையும் புதிய பாதைகளையும் ஏற்படுத்துகிறது. பழைய பாதைகள் அடைபட்டு இயற்கை ஏரிகள் உருவாகின்றன. ஆற்று நீரில் வந்த வண்டல் படிகிறது. நிலமட்டம் மேலும் உயர்கிறது. ஆறு தாறுமாறாக ஓடுகிறது. இவ்வாறு இங்கு நீர்வளமும் நிலவளமும் கொழிக்கின்றது.

ஆறு கடலை நோக்கிச் செல்லும் ‌போது கடலலைகளால் ஒதுக்கப்பட்ட மணல் திட்டுகள் அவற்றைத் தடுக்கின்றன. ஆறு தேங்குகிறது. எங்காவது ஓரிடத்தில் உடைத்துக் கொண்டு ஆற்று நீர் கடலுடன் கலக்கிறது. கடல் நீர் ஆற்றினுள்ளும், ஆற்று நீர் கடலினுள்ளும் மாறிமாறிப் பாய்கின்றன. பெரும் காயல்களும் உப்பங்கழிகளும் தோன்றுகின்றன. ‌நெய்தல் நிலம் இது தான்.ஐந்திணைப் பாகுபாடு எங்கு தோன்றியிருக்க வேண்டும்:

இத்தகைய ஐந்நிலப் பிரிவு முழுமையாக இடம் பெற வேண்டுமாயின் ஆறு தோன்றும் மலைக்கும் அது கலக்கும் கடலுக்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு இருக்க வேண்டும் இன்னும் குறிப்பாக முல்லை நிலம் முடிவதற்கும் மருத நிலம் தொடங்குவதற்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு வேண்டும். எடுத்துக்காட்டாக கங்கையாறு 2400 கி.மீ. நீளமிருந்தும் அதன் வடக்கே இமய மலையும் தெற்கே விந்திய, சாத்புர மலைகளின் கிழக்கு நோக்கிய தொடர்ச்சியும் மேற்கே ஆரவல்லி மலைகளும் ஆற்றை நெருக்கி நிற்கின்றன. அதனால் ஆற்றுக்கும் மலைகளுக்கும் இடையில் பாலை தோன்ற இடமின்றி அடர்த்தியான காடே இருந்தது. இந்த அடர்த்தியான காட்டையழித்து ‌வேளாண்மை செய்ய இரும்புக் கருவிகள் தோன்றிய பின்னரே இயன்றது. அதனால் கங்கைச் சமவெளியில் மக்கள் குடியேற்றம் பிற பகுதிகளை விட காலத்தாழ்த்தியே இடம் பெற்றது. இது வரலாற்றாசிரியர்கள் கூற்று.

மாறாக நீலாறு, யூப்பிரடிசு-டைகரீசு, சிந்தாறு போன்றவற்றில் இடையில் பாலை நிலம் இருந்ததால் பாலையும் மருதமும் மயங்கும் இடைநிலத்தில் அடர்த்தியில்லாத மென்காடுகளில் பழம் பெரும் நாகரிகங்கள் தோன்றிச் செழித்தன.

இன்றைய தமிழகத்தில் மலையடிவாரங்களிலிருந்து மருத நிலத்துக்குள்ள தொலைவு மிகக் குறைவு. இதனால் இங்கு பேராறுகளும் இல்லை, தனியான பாலை நிலமும் இல்லை. விரிவான மருத நிலம் காவிரிக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு தனியான பாலை நிலம் இன்மையால் பொருளிலக்கணத்ததில் கூறப்படும் ஐந்திணைப் பண்பாடும் அதற்குரிய ஐந்நிலப் பகுப்பும் இன்றைய தமிழகத்துக்கு உரியதல்ல. நாம் ஏற்கனவே கூறியது போல் இந்த ஐந்திணைப் பாகுபாட்டுக்குரிய தடயங்கள் உலகின் வேறு நாகரிகங்கள் எவற்றிலும் காணப்படாமையால் இது தோன்றிய இடம் கடலில் முழுகியதாகத் தமழிகத்தில் நீண்ட நெடுங்கால மரபாக இடம் பெற்றுள்ள குமரிக் கண்‌டமே என்று முடிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

பலர் எழுப்பும் ஒரு கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது. முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை எனும் படிவம் கொள்ளும் என்ற வகையில் இந்தக் கருத்து உருவாகியிருக்கக் கூடாதா என்ற கேள்வி தான் அது. தனியாக ஒரு நிலப்பரப்‌பில்லாத நிலையில் கோடையின் திரிபாகப் பாலையைக் கொள்வதற்குப் பகரம் இவை இரண்டின் இயற்கை இயல்பாகப் பாலைத் தன்மை கொள்ளப்பட்டிருக்குமேயன்றி ஒரு தனி நிலப்பரப்புக்குரிய பண்பாகக் கூறப்பட்டுப் பாலை தனியாகப் பிரிக்கப்பட்டிருக்காது.

மனிதன் பருப்பொருளான உலகிலிருந்தே தன் கருத்துக்களைப் பெறுகிறான். அவ்வாறு முதனிலையில் பருப்பொருட்களிலி‌ருந்து பெறப்பட்ட கருத்துக்கள் ஒன்றோடொன்று வினைப்பட்டு பருப்பொருளியற்கையில் இல்லாத இரண்டாம் நிலை கருத்துகளும் கற்பனையும் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் இரண்டாம் நிலைக் கருத்துகளிலிருந்து அறிவியலும் புதுப்‌புனைவுகளும் மாயைகளும் உருவாகின்றன.

மனிதச் சிந்தனை பற்றிய மேலே கூறிய அறிவியற் கருத்தின் அடிப்படையில் நோக்கினால் ஐந்திணைப் பண்பாட்டை உருவாக்கிய மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தில் இருந்த உண்மையான நிலைமைக்கொப்ப ஐந்திணைக் கோட்பாட்டை உருவாக்கினர். அந்த இடத்திலிருந்து புதிய நிலப்பரப்புக்கு வந்த பின்னரும் அவர்கள் தங்கள் பழைய கருத்தைக் கைவிடாமல் புதிய இடத்தில் கையாண்டனர். இருந்த உண்மை நிலையை எடுத்துக் கூறிய தொல்காப்பியர் ′′நடுவண தொழிய′′ என்று கூற வேண்டியதாயிற்று. இந்த முரண்பாட்டை நீக்க முனைந்த இளங்கோவடிகள் இங்கு நிலவிய நிலையினடிப்படையில் ஒரு ‌தீர்வைக் கூறினார். இன்றைய தமழிகத்‌தின் நிலத்தன்மை இதற்‌கு மிகப் பொருந்துகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான முகடு தமிழகத்தின் மேற்கெல்லையாக அமைந்துள்ளது. இந்த முகட்டுக்கு மேற்கே உள்ளதைப் போல் தமிழகத்து மலைப்பகுதி பன்மலை அடுக்கம் உள்ளதாக இல்லை. எனவே இங்கு மழைக்காலத்தில் பெருமளவில் மலையினுள் நீர்பிடித்து வைக்கப்படுவதில்லை. எனவே இங்கு த‌‌மிழகத்தின் குறிஞ்சிப் பகுதியும் முல்லைப் பகுதியும் ஏறக்குறைய அரைப்பாலைவன நிலையிலேயே உள்ளன. இந்தத் தன்மையும் இளங்கோவடிகளின் கருத்து உருவாவதற்குக் காரணமானது.

இளங்கோவடிகள் குமரிக் கண்டம் முழுகியதை அறிந்திருந்தும் மனக்குமுறலுடன் அதை நமக்குக் தெரிவித்திருந்தும் பாலைத் திணையின் முரண்பாட்டை குமரிக் கண்டம் முழுகியதுடன் இணைத்துப் பார்க்காததே இந்‌தத் தீர்வை மேற்கொண்டதன் காரணமாகும்.பாலைத்திணை விடு(வி)க்கும் மிகப் பெரிய புதிர்:

பாலைத் திணை தன்னகத்தே கொண்டுள்ள புதிர் ஐந்தினைக் கோட்பாடு தோன்றிய இடத்தைப் பற்றிய கேள்விக்கு ம‌ட்டும் விடை காணும் திறவு கோலாக இல்லை. ஐந்தினைக் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இது எவ்வாறு?

இன்று உரையாசிரியர்களைப் பின்பற்றி நாம் ஐந்திணை உரிப்பொருள்களுக்குத் தரும் விளக்கம் பின்வருமாறு:குறிஞ்சி : புணர்தல்
முல்லை : பிரிவை ஆற்றி இருத்தல்
பாலை : பிரிதல்
மருதம் : பிரிவிற்காக ஊடல்
நெய்தல் : பிரிவை நினைத்து இரங்கல்இவற்றைத் தொகுத்தால் நமக்குக் கிடைப்பவை இரண்டே திணை உறவுகள் தாம்; ஒன்று புணர்தல் இன்னொன்று பிரிதல். ஆனால் உண்மை அது தானா என்ற ஐயத்தை எழுப்புவது பாலைத் திணை.

பிரிவு இருவகைப்படும் என்கிறது தொல்காப்பியம்.

அவை உடன்போக்கும் தலைவியைத் தலைவன் பிரிதலும் எனவும் கடல் வழிப் பிரிவும் நிலவழிப் பிரிவும் எனவும் வெவ்வேறு உரையாசிரியர்கள் கூ‌றியுள்ளனர். ஆனால் இத்தகைய ஐயத்திற்கிடமின்றி

கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவன் இரங்கலும்
உ‌‌ண்டென மொழிப ஓரிடத்‌தான

என்று தொல்காப்பியர் தெளிவுபடுத்திவிட்டார்.

அவ்வாறாயின் உடன்போக்கும் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது புலனாகிறது. தலைவ‌ன் தலைவியைப் பிரியாதபோதும் பிரிவு எனும் கருத்துப்‌ பெறுமாயின் உண்மையில் அந்தப் பிரிவு எதைக் குறிக்கிறது? யார் யாரை அல்லது எதனைப் பிரிவதைப் பிரிவென்று பொருளிலக்கணம் குறிக்கிறது? இதைத் தடம்பிடித்துச் சென்றால் பொருளிலக்கணம் கூறும் ஐந்திணை ஒழுக்கம் குறி‌ப்பது ஒரு தலைவனையும் தலைவியையும் மட்டும் பற்றியதல்ல, முழுக் குமுகத்தையும் பற்றியதென்பது புலப்படும். பிரிவு என்பது தலைவன் தலைவியைப் பிரிவதை மட்டுமல்ல, அவர்கள் இருவரும் தாம் வாழும் குமுகத்தையும் தம் நிலத்தையும் விட்டுப் பிரிவதையும் குறிக்கிறது. இந்தப் புலனத்திலிருந்து நாம் இப்போது ஐந்திணை ஒழுக்கம் எதைக் குறிக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மானிடவியல் எனப்படும் மாந்தநூல் நமக்குத் துணை செய்யும்.

0 comments:

Post a Comment