Followers

இரவீந்திரநாத் தாகூர்

on Saturday, June 18, 2011

                ரவீந்திரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டில் தனது 80 ஆவது வயதில் இறந்தார். அவர் கிட்டத்தட்ட- ஆயிரமாண்டு பழமையான வங்காள இலக்கியத்தின் நாயகர்களில் ஒருவர். இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளிலும் மிக பரந்தளவில் புகழ்பெற்றவர். அவருடைய கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை மிகவும் பரந்த அளவில் உலகம் முழுவதும் வாசிக்கப்படுகின்றன. பாடல்களுக்கு அவர் அமைத்த இசை கிழக்கிந்தியாவை தாண்டி, தெற்காசியாவில் எதிரொலிலித்து, உலகம் முழுவதும் மணம் பரப்புகின்றன.

தாகூரின் படைப்புகள் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் எழுதப்பட்டவை. ஐரோப்பாஅமெரிக்கா, ரஷ்யா என உலகம் முழுவதும் நேசிக்கப் பட்டன. அவற்றில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தின. குறிப்பாக கீதாஞ்சலிலியை கூறலாம். 1913-ஆம் ஆண்டு கீதாஞ்சலிலி படைப்புக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அன்று நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆசியர் இவரே. வங்காள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் தாகூரின் தாக்கம் மிகவும் அதிகம். இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கிய பன்முக சிந்தனையாளராக இரவீந்திரநாத் தாகூர் நினைவு கூறப்படுகிறார்


இரவீந்திரநாத் தாகூர் பாரம்பரியமான இந்து குடும்பத்திலிலிருந்து வந்தவர். அவர் இந்துமத இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்என்றாலும், வங்காள முஸ்லீம்களின் மீது அதிக அன்பு கொண்டவர். இவரின் சிந்தனைகள் முஸ்லீம் மக்களை ஈர்த்தன. அதனால்தான் புதிதாக உருவான வங்காளதேசம்  தாகூரின் பாடலான "அமர் சோனார் பங்களா' (என் தங்கமான வங்காளம்) என்ற பாடலை தனது நாட்டின் தேசிய கீதமாக்கிக் கொண்டது.

உலகில் இந்து கலாச்சாரம், முஸ்லீம் கலாச்சாரம், மேற்கத்திய கலாச்சாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. ஆனால் தாகூரின் குடும்பம் இந்த மூன்று கலாச்சாரங்களுடன் பிணைக்கப்பட்டது. அவரின் வங்காள குடும்பம் இந்து, முஸ்லீம், ஆங்கில நாகரிகத்தை உள்ளடக்கியது. தாகூரின் தாத்தா துவாரகநாத் அரபி, பாரசீக மொழிகளில் புலமைப்பெற்றவர். தாகூருக்கு சமஸ்கிருதம், இஸ்லாம், பாரசீக இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானமிருந்தது. இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மூன்று மதங்களும் தாகூரை மாறுபட்ட மனிதராக உருவாக்கியது. அதனால்தான் அவரின் சிந்தனையும் மாறுபட்ட யதார்த்தவாத படைப்புகளாக விளங்கியது.

தாகூர் உலகின் சிறந்த கவிஞர் மட்டுமல்ல. மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர், இசையமைப்பாளர், சிறந்த ஓவியர், என பன்முகத் தன்மையுடையவர். அவரின் படைப்புகளில் இலக்கியம், அரசியல், கலாச்சாரம், சமூக மாற்றம், மத நம்பிக்கை, தத்துவம், சர்வதேச விவகாரம் ஆகிய பல அம்சங்களும் பொதிந்திருக்கும். அதனால்தான் தாகூரின் சிந்தனைகள் இந்திய துணைக் கண்டத்தில் முதல் அரை நூற்றாண்டுக் காலம் ஆளுமை செலுத்தியது.  

தாகூரும் காந்தியும் நல்ல நண்பர்கள். என்றாலும் பல்வேறு கருத்துகளில் தாகூர் காந்தியிடமிருந்து மாறுப்பட்டார். குறிப்பாக தேசியம், நாட்டுப்பற்று, கலாச்சார மாற்றம், அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் இருவருக்கிடையே வேறுபாடுகள் இருந்தன. காந்தியின் கருத்துகளில் பழமைவாதம் அதிகமிருக்கும். ஆனால் தாகூரின் கருத்துகளில் அறிவியல் பூர்வமான விளக்கமிருக்கும். காந்தியின் பல கருத்துகளை கடும் விமர்சனம் செய்துள்ளார் தாகூர். இந்தியாவுக்கு சிறந்த தலைமையை காந்தி வழங்கவில்லை என்றே தாகூர் கருதினார். என்றபோதிலும் காந்தியை முதன் முதலாக மகாத்மா (பெரிய ஆத்மா) என அழைத்தவர் தாகூர்தான்இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகப்பெரிய வேறுபாடுக் கொண்டது. காந்தி தனது தாம்பத்ய வாழ்க்கையை பகிரங்கமாக ( காந்தி எழுதிய சத்தியசோதனை என்ற நூலிலில்) எழுதினார். ஆனால் தாகூரோ "தாம்பத்திய வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது பெண்ணியத்தை கேலிலி செய்வதாகும்' என எழுதினார். எனினும் தாகூரின் வாழ்க்கை இனிமையாக இருக்கவில்லை, சோகமானது. தாகூர் 1883-இல் திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி மிருனாலி தேவி 1902-இல் இறந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தாகூருக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தனர். அவர் மீது மிகுந்த அன்பை செலுத்தினர். நீண்ட விவாதங்கள் (குறிப்பாக விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் மனைவி அபலாபோஸ் போன்று) செய்தனர். ஆனால் அவை அனைத்தும் கருத்து பறிமாற்றங்களை தாண்டி செல்லவில்லை.

1930-இல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ரவீந்திரநாத் தாகூரும் உரையாடியது, அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. அதில் உண்மை எந்த அளவுக்கு கருத்துகளிலும் அறிவியலிலும் பிரதிபலிக்கிறது' என்பதை கூறியிருந்தார். அந்த நேர்காணலில் ஐன்ஸ்டைன் தாகூரின் தத்துவ கருத்துகளை புகழ்ந்திருப்பதை பார்க்கலாம்.


தாகூர் தேசியத்திற்கு எதிரான கொள்கையையே கொண்டிருந்தார். "இந்திய துணைக்கண்டத்தில் இந்து, முஸ்லீம், கிருத்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களும் இருக்கும்போது, இந்து தேசியம் என்பது மோசமான கொள்கை' என்றார். ஆனால் காந்தியோ இதற்கு நேர் எதிராக தேசியத்தை ஆதரித்தார். அவரின் ராமராஜ்யம் போன்ற வார்த்தைகள் இந்து தேசியத்தை முன்னிறுத்தியது.

தாகூரின் குடும்பம் ஆங்கிலேயரிடம் நட்புடன் இருந்துள்ளது. என்றபோதிலும் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தாகூர் உறுதியுடன் இருந்தார். 1905-இல் கர்சன் பிரபுவால் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது தாகூர் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக பேசினார். தாகூரின் பாடல்கள் வங்காள வீதிகளில் பாடப்பட்டது. அதேபோல 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி ஆங்கில ராணுவம் அமைதியான பொதுமக்கள் கூட்டத்தின் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 379 பேர் இறந்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனது கடும் கண்டத்தை தெரிவித்து ஐந்து கடிதங்களை அன்றைய வைசிராய்க்கு எழுதி    னார் தாகூர். தனக்கு ஆங்கில அரசு வழங்கிய "நைட்வுட்'  (Knight wood) பட்டத்தை திருப்பி அனுப்பினார்.

இந்தியா விடுதலையடைந்தவுடன், தாகூர் எழுதிய "ஜன கன மன அபிநாயக' என்ற பாடல் தேசியக் கீதமாக்கப்பட்டது. அதேபோல வங்காளதேசம் என்ற புதிய நாடு, தாகூர் எழுதிய "அமர் சொனார் பங்களா' என்ற பாடல் தேசியக்கீதமாக்கிக்கொண்டது. உலகில் இதுவரை இரண்டு மாறுபட்ட தேசங்களுக்கு தேசியகீதம் இயற்றிய பெருமை இரவீந்திரநாத் தாகூருக்கு தவிர வேறுயாருக்குமில்லை.

இரவீந்திரநாத் தாகூரின் கல்வித்திட்டம் இன்றும் அற்புதமானவை. அவர் வெறும் ஆரம்பக்கல்வி பற்றி மட்டுமே பேசவில்லை. பள்ளி என்பது மாணவர்கள் நேசிக்கும் மகிழ்வான இடமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர். செயற்கைத்தனமான பள்ளிகளையும் கல்வி முறைகளையும் கண்டித்தார். இயற்கையான பள்ளிச் சூழலை பற்றி பேசினார். எப்படி பள்ளியை உருவாக்குவது, குழந்தைகளை எப்படி கவருவது, அவர்களை எப்படி மிகச் சிறந்த மதிநுட்பம் கொண்டவர்களாக தயார்செய்வது என விரிவாக எழுதினார். ஏட்டில் மட்டுமல்லாமல் அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்சாந்திநிகேதனில் சாதித்துக் காட்டினார். தனது வாழ்கையில் அதிக நாட்கள் சாந்திநிகேதன் பள்ளியை முன்னேற்றுவதிலேயே கழித்தார். அவரின் நோபல் பரிசு  நிதி முழுவதையும் சாந்திநிகேதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார். கட்டணமில்லாத இலவசக் கல்வியை போதித்தார். ஆங்கில அரசிடமிருந்து எவ்வித நிதி யுதவியையும் பெறவில்லை. சில தனிபட்ட நபர்கள், அவரது நண்பர்கள் மற்றும் காந்தி போன்றோர் நிதி யுதவி செய்தனர்.

தாகூர் விரும்பிய கல்வியானது அறிவியல், இலக்கியம், கலை, மனிதவளம் சார்ந்ததாக இருந்தது. அதன்படியே சாந்திநிகேதனில் கல்வியை போதித்தார். இந்திய கலாச்சாரம், வங்காளம் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் போதிக்கப்பட்டன. சாந்திநிகேதனின் மாணவர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சாந்திநிகேதனில்தான். தாகூர் எனக்கு "அமர்த்தியா சென்'  (அழிவில்லாதவன்) என பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல் கல்வி போதித்த ஆசிரியர். அந்த பள்ளி பல வகையில் மறு பட்டது. வகுப்புகள் எப்போதும் வெட்டவெளியில்தான் நடக்கும். அப்போதுதான் இயற்கையை ரசிக்க முடியும்; அமைதி நிலவும். பள்ளியில் தேர்வு நடைபெறாது. ஆனால், அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவை இந்திய கலாச்சாரம் தொடங்கி மேற்கத்திய சிந்தனைகளுக்கு பிறகு, சீனா அல்லது ஜப்பான் கலைகளில் முடியும்.

அதேபோல தாகூரின் கலாச்சார சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றை சத்யஜித்ரேயின் படங்களில் பார்க்கலாம். சத்யஜித்ரேயும் சாந்திநிகேதனில் பயின்றவர். அவரின் பல படங்கள் தாகூரின் கதைகளின் அடிப்படையில் உருவானவை. இதை பற்றி 1991-இல் சத்யஜித்ரே, ""சாந்திநிகேதனில் மூன்று வருடங்கள் கழித்தது என்னுடைய வாழ்வில் உன்னதமான காலங்கள். அது என்னுடைய கண்களை முதல் முறையாக திறந்தது. இந்தியா மற்றும் கிழக்காசிய கலைகளை கற்றுத் தந்தது. அங்கு மேற்கத்திய கலை, இசை மற்றும் இலக்கியம் கற்றுக்கொண்டேன். சாந்தி நிகேதன் கலையையும் இசையையும் என்னுள் விதைத்தது''  என்றார். இதேபோலதான் ஜவஹர்லால் நேரு தனது "தி டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலிலில் சாந்திநிகேதனை பற்றி சிறப்பாக எழுதியிருப்பார். அதோடு நில்லாமல் தனது மகள் இந்திரா பிரியதர்ஷினியை சாந்திநிகேதனில் (1934- 35) கல்வி பயில அனுமதித்தார். ரவீந்திரநாத் தாகூர்தான் இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி (அமைதியான பார்வை) என பெயர் சூட்டினார்.

சுருக்கமாக சொன்னால், இரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் மிக சிறந்த தீர்க்கதரிசி ஆவார். இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுவரும் சிந்தனைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே வலியுறுத்தி வந்தவர். குறிப்பாக, இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை என்ற இழிவை நீக்குதல், மத சார்பின்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நேயத்தை பேணிகாத்தல் ஆகியவை தாகூர் சிந்தனைகளின் சாரமாகும். இவை என்றைக்கும் மனித குல முன்னேற்றத்திற்கான ஆதாரங்களாக உள்ளன.

0 comments:

Post a Comment